வாழ்க்கையில் சாதித்து முன்மாதிரியாக செயல்படும் தலைவர்களை கண்டு நான் எப்போதும் வியந்ததுண்டு. மற்றவர்களுக்கு முன் உதாரணமாய் திகழும் வகையில் சிலர் வாழ்க்கைப் பயணம் அமைவது கண்டு நான் ஆச்சரியம் கொண்டும் இருக்கின்றேன்.
அப்படி நான் வியந்து போற்றக்கூடிய சிறந்த மனிதர், என்னுடைய அருமை நண்பர் திரு. Kal Raman அவர்கள், President - Commerce IQ. சர்வதேச அரங்கில் தனக்கென ஒரு முத்திரை பதித்த நம் மண்ணின் மைந்தன்.
ஆம். Kal என்று அன்புடன் அழைக்கப்படும் அவர், இந்தியாவின் தென் தமிழ்நாட்டின் திருநெல்வேலி நகரத்தில் தன் வாழ்க்கை பயணத்தைத் தொடங்கினார். தொழில் முனையில் அவரது வளர்ச்சி பாதை எவரும் வியக்கத்தக்கதாகவே இருந்தது.
Sam Walton's Walmartடுடன் தனது தொழில் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க பகுதியை செலவழித்த பின்னர், பல முன்னணி நிறுவனங்களில் தலைமை பணிகளில் பணிபுரியும் வாய்ப்பையும் பெற்றார். GroupOnல் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தது, அமேசானின் Jeff Bezos போன்றவர்களுடன் இணைந்து பணியாற்றியது, Samsungல் தலைமை டிஜிட்டல் அதிகாரியாக இருந்தது என பல முதன்மை பணிகளில் ஈடுபட்டது அவர் தொழில் வாழ்க்கையின் சிறப்பம்சங்கள் ஆகும். Commerce IQ வின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி திரு. குரு ஹரிஹரனுடனான இந்த YouTube நேர்காணலில், Kal Raman அவர்கள் தான் வளர்ந்து வந்த வாழ்க்கை பாதையில் தான் சந்தித்த இன்னல்கள், அதிலிருந்து மீள அவருக்கு உதவிய உயர்ந்த வாழ்க்கை நெறிகள், தன் குணத்தை பண்படுத்த உதவிய தருணங்கள் மற்றும் பல சுவாரசியாமன தகவல்களை மனதின் ஆழத்தில் இருந்து பகிர்ந்து இருக்கிறார்.
உண்மையிலேயே இது ஒரு சிறந்த நேர்காணல். இந்த உரையாடலின் ஒவ்வொரு பகுதியாக நகர நகர ஒவ்வொரு நிகழ்ச்சியும் என்னுள் சில ஆழமான சிந்தனைகளைத் தூண்டி, ஒரு தலைவராக எனது சொந்தப் பயணத்தைப் பிரதிபலிக்கச் செய்தது. இருப்பினும், நீங்கள் தவறவிடக்கூடாத நேர்காணலில் இருந்து சில உண்மையான விலைமதிப்பில்லாத பொக்கிஷங்களை முன்னிலைப்படுத்துகிறேன்.
Kal Raman அவர்கள் குறிப்பிடுவது போன்று, அவரது இளமை பருவத்தில் வாழ்க்கை பெரும் போராட்டமாகவே அமைந்திருந்தது. 14 வயதில் தந்தையை இழந்த பிறகு, வெறுமையான எதிர்காலம் தான் Kal அவர்களின் கண்களுக்கு தெரிந்தது.
இந்நிலையில் அவரது தாயார் அவருக்கும் அவரது உடன்பிறப்புகளுக்கும் சிறந்த கல்வி புகட்ட வேண்டும் என்று உறுதி கொண்டு குடும்பத்தின் ஆணிவேராய் திகழ்ந்தார்.
வாழ்க்கை மிகவும் கடினமாக இருந்தது. தெருவிளக்கின் ஒளியில் படித்து, தமிழக அரசின் இலவச சத்துணவு திட்டத்தின் மூலம் பசி ஆற்றி, நல்ல உடைகள் வாங்க கூட இயலாத சூழ்நிலையில் தினசரி வாழ்வு சோதனையாக நகர்ந்தது.
ஆனால் இளவயதில் Kal இவற்றை சிரமங்களாகப் பார்க்கவில்லை. நன்றாகப் படிப்பதே அவரது வேலை என உணர்ந்தார். மேலும் அவருடைய வழியில் எந்த தடை வந்தாலும் அதை தகர்த்தெறிந்து எதிர்நோக்கி செல்வதில் உறுதி கொண்டார்.
வாழ்க்கையில் நலமாக இருக்கும்போது கெட்ட பழக்கங்கள் சேர்வதற்கான சூழ்நிலையும் உருவாகும். ஆனால் கடினமான காலங்களில் மட்டுமே நம் குணாதிசயங்கள் பக்குவப்படுகின்றன.
வாழ்க்கையில் நம்மை சோதிக்கும் தருணங்களிலும் தவற செய்யாது இலக்கில் உறுதியாக இருந்தால் வெற்றி கிட்டும் என்பதற்கு Kal அவர்களின் வாழ்க்கையே ஒரு நல்ல சான்று.
அவரது தாயார் அவருக்கு கல்வி கற்பதற்கு தன்னால் இயன்றதைச் செய்தாலும், புத்தகங்கள் மற்றும் நோட்டுப் புத்தகங்கள் வாங்க முடியாத சூழ்நிலை இருந்தது. ஆனாலும் ஒவ்வொரு இக்கட்டான சூழ்நிலையிலும் தனக்கு உதவி கரம் நீட்டி, தான் 12 ஆம் வகுப்புத் தேர்வில் பள்ளி கல்வியை முடிக்க உதவிய அனைத்து நல் உள்ளங்களையும் அன்புடன் நினைவு கூறுகிறார் Kal.
மாவட்டத்தில் முதலிடம் பிடித்து மாநில அளவில் 13வது இடம் பிடித்தார். தான் நிகழ்த்திய சாதனையை பற்றி அறிய, செய்தித்தாள் கூட வாங்க இயலாத நிலை என்று அவர் கூறுவதை கேட்கும் போது நெஞ்சம் நெகிழ்ந்து போகிறது.
அவர் பெற்ற அதிக மதிப்பெண்கள் காரணமாக மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க தகுதி பெறுகிறார். ஆனால் 2 விண்ணப்பங்களை வாங்க பண வசதி இல்லாமல் ஏதாவது ஒன்றை மட்டும் தேர்ந்தெடுக்க நேர்ந்த வேடிக்கையான நிலையை சிரித்தவாறு நினைவு கூறுகின்றார்.
மூன்றாவது நபராக உங்கள் வாழ்க்கையைப் பாருங்கள். இதில் நீங்கள் கற்றுக்கொள்ளக்கூடிய பல பாடங்கள் இருக்கலாம்.
இவ்வாறு வாழ்க்கை செவ்வனே நகர்ந்து கொண்டிருக்க ஒரு சுவாரஸ்யமான திருப்புமுனை நிகழ்கிறது. Kal அவர்கள் மருத்துவம் மற்றும் பொறியியல் இரண்டிற்கும் தேர்ந்தெடுக்கப்படுகிறார். மெட்ராஸ் கிண்டி பொறியியல் கல்லூரியில் பொறியியல் படித்தார். (Kal மற்றும் அவரைப் போன்ற பலருக்கு, என்னையும் உட்பட, மெட்ராஸ் எப்பொழுதும் மெட்ராஸ் 😊).
மேலும் மருத்துவ படிப்புக்கு தன் சொந்த ஊரின் அருகாமையில் திருநெல்வேலியில் அமைந்த மருத்துவ கல்லூரியிலும் தேர்வு பெறுகிறார்.
சென்னை வாழ்க்கையில் ஆகக் கூடிய கூடுதல் செலவை கருத்தில் கொண்டு, மருத்துவ படிப்பு தான் ஒரே வழி என்று குடும்பத்தினர் முடிவு செய்தனர்.
அம்மாவின் முடிவை மனம் ஏற்றுக் கொண்டாலும் Kal அவர்களின் சிந்தனை எல்லாம் மெட்ராஸை நோக்கியே இருந்தது.
இது ஒரு புதிய இடம். தனது பிரபஞ்சம் திருநெல்வேலியில் தொடங்கி முடிவதை அவர் விரும்பவில்லை. தன் உள்ளுணர்வில் தீவிர நம்பிக்கை கொண்டு மெட்ராஸ் நோக்கி பயணத்தை தொடர்ந்தார்.
நீங்கள் தோல்விகளைத் தழுவப் போவதில்லை என்றால் நிலையான வெற்றியை என்றும் உணர முடியாது.
நீங்கள் அனைவரும் இந்த முழு நேர்காணலையும் கண்டிப்பாக கேட்க வேண்டும் என நான் பரிந்துரைக்கின்றேன். இதில் Kal தன் தொழில் சார்ந்த வாழ்க்கையின் ஆரம்ப கால நிகழ்வுகள், எவ்வாறு அவரை ஒரு நல்ல மனிதனாகவும் கார்ப்பரேட் உலகம் வியந்து நோக்கும் ஒரு சிறந்த தலைவராகவும் உருவாக்க உதவின என்பதை விவரிக்கிறார்.
கடவுள் இருக்கிறார் என்று நான் நம்புகிறேன், கடவுள் சக உயிரினங்களின் வடிவத்தில் இருக்கிறார்.
Kal அவர்கள் கடவுள் மீது ஒரு பெரிய நம்பிக்கை கொண்டவர். அவரிடம் கடவுள் என்றால் என்ன! என்று கேட்டபோது, அவர் பகவத் கீதையில் கிருஷ்ணரை மேற்கோள் காட்டுகிறார்.
எப்போதும் என்னை நினைத்திரு; என்னிடம் உண்மையாக இரு; என்னை போற்றி இரு. - பகவத் கீதை
இதே கூற்றில்
கடவுளுக்கு பதில் வாடிக்கையாளர்களை நினைத்து பாருங்கள். நீங்கள் வெற்றிகரமான வணிகத்தைப் பெற முடியும்.
கடவுளுக்கு பதில் ஊழியர்களை நினைத்து பாருங்கள், நீங்கள் ஒரு வெற்றி கூட்டணியை உருவாக்க முடியும்.
கடவுளுக்கு பதில் பங்குதாரர்களை நினைத்து பாருங்கள், நீங்கள் அனைவரையும் மகிழ்ச்சியடையச் செய்ய முடியும்.
நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் உங்களுக்கு ஏதாவது சிறந்த வகையில் கற்பித்தவர்களாக அமைவார்கள் என இறை நம்பிக்கையோடு நம்மோடு பகிர்கின்றார் .
Jeff Bezos, Sam Walton, Wilke, Rick, Diago போன்ற சிறப்பான தலைவர்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பை Kal பெற்றார். இவர்கள் "உலகில் இன்றியமையாதவர் என்று ஒருவர் இருந்தால் அது நமது வாடிக்கையாளர் மட்டுமே" என்ற கலாச்சார கோட்பாட்டுடன் தம் நிறுவனங்களை செதுக்கிய மாபெரும் தலைவர்கள். அவர்களோடு பணியாற்றிய நேரங்களில் அவர்களிடம் தான் பயின்ற சில முக்கிய நுண்ணறிவுகளை பற்றி விவரமாக கூறுகின்றார் Kal. இவை அனைத்தும் ஒவ்வொருவர் தொழில் வாழ்க்கைக்கும் உகந்த சிறந்த அறிவுரையாக கொள்ளலாம்.
சரி, இது ஒரு எளிய இனியநேர்காணல். வாழ்க்கையின் சோதனை கடலில் சிக்கி தவிக்காமல் எதிர் நீச்சல் இட்டு வெற்றி கண்ட Kal அவர்களின் வெற்றி பயணத்தை கண்டோம். வளர்ந்து வரும் தொழில் வல்லுநர்கள் அனைவருக்கும் இந்த உரையாடல் ஒரு அறிவு பொக்கிஷம் என்றே சொல்ல வேண்டும். இதுபோன்ற இன்னும் பல தலைமைத்துவக் கதைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வேன் என்று நம்புகிறேன். மன உறுதி, உறுதிப்பாடு மற்றும் நெகிழ்ச்சி ஆகியவற்றால் பிறந்த வெற்றிக் கதைகள் மேலும் மேலும் தொடரும்.